“குண்டு வைப்பவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள், பிடிக்கப்படுவது முஸ்லிம்கள் – இதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை!” – வழக்கறிஞர் ஷாஜஹான் மலேசியாவில் உரை
18 Jun 2013
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 16.06.13 ஞாயிறன்று “இஸ்லாத்திற்கெதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கின் ஆரம்பமாக உஸ்தாத் காரீ முஹம்மத் அப்ராருல் ஹக் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் ஜனாப் முஹம்மத் அலீ ஜின்னாஹ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கருத்தரங்கிற்கு டத்தோ ஜமருல் கான் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்தத் தலைப்பின் அவசியத்தையும், மலேசியாவில் வாழும் இந்திய முஸ்லிம்களின் நிலைமையையும் சுட்டிக்காட்டினர். முஸ்லிம் இளைஞர்களுக்கு நிச்சயம் வலுவான கட்டமைபுடன் கூடிய இயக்கம் தேவை என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஜனாப் வேங்கை இப்ராஹீம் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். அவர் பாப்புலர் ஃபிரண்டின் பணிகளை விரிவாக எடுத்துக் கூறினார். அடுத்ததாக “இஸ்லாத்திற்கெதிரான சதி” என்ற தலைப்பில் சமூக ஆர்வலர் சகோ. தமீம் ஃபைஸல் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். “இஸ்லாத்திற்கெதிரான சதி என்பது இன்றோ, நேற்றோ நடத்தப்படுவது இல்லை. மாறாக, இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தே நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அனைத்து சதியையும் முறியடித்து முன்னேறியதே இஸ்லாமிய வரலாறு. ஆகவே ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்தும் ஒன்றிணைந்து சதியை முறியடிக்கப் போராட வேண்டும்” என்று அவர் தனது உரையில் கூறினார்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாப்புலர் ஃபிரண்டின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் அவர்கள் “இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:“இந்தியாவில் முஸ்லிம்கள் திட்டமிட்டு பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றார்கள். இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத சம்பவத்திற்கும் பின்னணியில் இருப்பது ஹிந்துத்துவா தீவிரவாதிகள். ஆனால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவது அப்பாவி முஸ்லிம்கள்.
இந்தியாவில் அனைத்துத் துறையிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிரார்கள். முஸ்லிம்களுக்கு நீதிமன்றங்கள் என்பது அநீதிமன்றங்களாகவே செயல்படுகின்றன. குறிப்பாக, அஃப்ஸல் குரு வழக்கு, பாபரி மஸ்ஜித் வழக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். EQUAL RIGHTS FOR ALL என்ற இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் சாசன சட்டம் வெறும் சட்டமாகவே இருக்கின்றதே தவிர செயல்பாட்டில் இல்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு சொன்னதைப்போல, இந்தியா பலவித மலர்கள் பூக்கின்ற பூந்தோட்டம்தான். ஆனால் தற்பொழுது அந்தப் பூந்தோட்டத்தில் நச்சு விதை விதைக்கப்பட்டு அது வளர்ந்து அந்தப் பூந்தோட்டத்தையே நாசம் செய்துகொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கபட்டுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாடு நம்மைப் பிரித்தாலும் முஸ்லிம்கள் என்ற ரீதியில் ஓரணியில் நின்று செயல்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தனது உரையில் கூறினார்.
பிறகு பாப்புலர் ஃபிரண்டின் பணியினை ஷாஜஹான் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, டத்தோ. ஹாஜி ஜமருல் கான், “அறம்” அப்துல் சுபுஹான், உஸ்தாத் அப்ராருல் ஹக், வேங்கை இப்ராஹீம் ஆகியோருக்கு பாப்புலர் ஃபிரண்டின் சார்பாக நினைவுப் பரிசினை வழக்கறிஞர் ஷாஜஹான் அவர்கள் வழங்கினார். டத்தோ. ஹாஜி ஜமருல் கான் அவர்கள் வழக்கறிஞர் ஷாஜஹான் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.
தனது அகவைதான் முதுமை பெற்றுள்ளது, ஆனால் தனது சிந்தனையையும், சமுதாயப் பணியினையும் வற்றாத இளமையோடு செயலாற்றிக் கொண்டிருக்கும் “இஸ்லாமிய நற்பணி மன்ற” நிறுவனர் “அறம்” அப்துல் சுபுஹான் அவர்கள் கருத்தரங்கின் ஆரம்பம் முதல் இறுதி வரை மேடையில் இருந்து ஆதரவு அளித்தார்.
இறுதியாக சமூக ஆர்வலர் சகோதரர் அன்சர் அலீ அவர்கள் நன்றியுரை ஆற்றி கருத்தரங்கை நிறைவு செய்தார். இந்தக் கருத்தரங்கை சகோதரர் முஹம்மத் கனி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
- thanks to .thoothuonline.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக