
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்களைப் பற்றி அரசுக்கு எதிராகப் பேசியதால், சஞ்சய்பட் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை சமீபத்தில் குஜராத் அரசு பணி நீக்கம் செய்தது. மேலும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், "பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மத்திய அரசிடம் முறையிட்டால், அதற்கு தகுந்த நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சு, குஜராத் காவல் துறையில் ஒழுங்கற்ற நிலையை ஏற்படுத்த தூண்டுதலாக அமைந்து விடும். இதை கண்டிக்கிறோம். அவர் இதுபோன்று மீண்டும் பேசாமல் இருக்க அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.
ப.சிதம்பரத்தின் பேச்சு, குஜராத் அரசுக்கு களங்கம் விளைவிப்பது போல் இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குஜராத் மாநில அரசை நிலையற்றதாக்க முயற்சி செய்கிறது.
இவ்வாறு நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக