ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

நேருவுக்கும் படேலுக்கும் இந்த ரயில் வண்டி எங்களின் சுதந்திரப் பரிசு’

பஞ்சாப்,15 ஆகஸ்ட் 1947
இந்தியாவின் மகிழ்ச்சி நிறைந்த சுதந்திர தினம் பஞ்சாபுக்கு ஒரு கொடிய நாளாகவே
அமைந்தது. அதன் பழமையான பசுமை நிறத்தைச் சிதைத்துக் கொண்டு தோன்றிய மகத்தான
சுதந்திர விடியலின் நிறம் ஊதாவும் தங்க நிறமுமாக இருக்கவில்லை;செந்நிறமாக
இருந்தது. அமிர்தசரஸில் உள்ள மொகலாயக் கோட்டையில் நகரின் புதிய அதிகாரிகள் கடமை
உணர்வோடு சுதந்திர தினச் சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும் வேளையில்,ஒரு மைல்
தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வெறிபிடித்த சீக்கியர்கள் கூட்டம்,தங்களின்
அண்டை வீட்டார்களான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். ஆண்களை
விதிவிலக்கின்றியும் ஈவிரக்கமின்றியும் அவர்கள் கசாப்பு செய்தனர். பெண்கள்
துகிலுரியப்பட்டார்கள். 
பலமுறை கற்பழிக்கப்பட்டார்கள். பின்னர் அஞ்சி நடுங்கிய
அவர்களை நகரத்தின் வழியே நடத்திப் பொற்கோவிலுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே
பலரின் கழுத்துகள் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தன.
சீக்கியர் மாநிலமான பாட்டியாலாவின் புறநகர்களில் சீக்கியக் குழுக்கள் சுற்றித்
திரிந்தன. எல்லைக் கடந்து பாகிஸ்தானுக்குத் தப்பித்து ஓடும் முஸ்லிம்கள் மீது
அவர்கள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். மகாராஜாவின் சகோதரரான இளவரசர்
பலீந்திரசிங் இப்படிப்பட்ட ஒரு குழுவை நீண்ட கத்திகளுடன் பார்த்து
திடுக்கிட்டுப் போனார். கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று
வேண்டிக் கொண்டார். “இது அறுவடைக்காலம். வீட்டுக்குத் திரும்பி உங்களின்
விளைபொருள்களை அறுங்கள்’என்றும் அவர் கூறினார்.
காற்றைக் கிழித்துக் கொண்டு கத்தியை வீசிய அந்தக் கும்பலின் தலைவன்
பதிலளித்தான்:‘முதலில் அறுத்திட வேறொரு பயிர் இருக்கிறது.’
செங்கற்களால் கட்டப்பட்ட அமிர்தசரஸ் ரயில் நிலையம் ஒரு வகையில் அகதிகள்
முகாமாகவே மாறிவிட்டது. பாகிஸ்தானின் பாதியாகிவிட்ட பஞ்சாபிலிருந்து ஓடிவந்த
ஆயிரக்கணக்கான இந்துக்கள் அங்கே தங்கியிருந்தார்கள். பயணிகள் தங்கும் அறை,
பயணச்சீட்டு வழங்கும் அறை,பிளாட்பாரங்கள் ஆகியவற்றில் மொய்த்துக் கிடந்த அந்த
மக்கள்,அங்கே வந்து சேரும் ஒவ்வொரு ரயில் வண்டியிலும் காணாமல் போன தங்களின்
உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்களா என்று தேடத் தயாரானார்கள்.
ஆகஸ்ட் 15 பிற்பகலில் அந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்
தனக்கேயுரிய நீலத்தொப்பி மற்றும் சிவப்புக் கொடியுடன்,பைத்தியம் பிடித்தவர்கள்
போல் அழுது கொண்டிருக்கும் கூட்டத்துக்கிடையே வழியேற்படுத்திக் கொண்டு வந்தார்.
பத்தாம் எண் ரயில் வண்டி வந்து சேரும்போது மீண்டும் பழைய காட்சியையே காண அவர்
தயாராகிவிட்டார். அவரது நிலையத்துக்கு ஒவ்வொரு ரயில் வரும்போதும் நடந்த அதே
காட்சிதான் இப்போதும் நடக்கப் போகிறது. அழுக்கேறிய மஞ்சள் நிற மூன்றாம்
வகுப்புப் பெட்டிகளின் ஜன்னல்கள்,கதவுகள் அருகே ஆண்களும் பெண்களும் அவசரமாகத்
தாங்கள் ஓடிவரும்போது விட்டு விட்டக் குழந்தைகளைத் தேடுவார்கள். பெயர்களைச்
சொல்லி கூவுவார்கள். அழுகையும் ஆவேசமும் கொண்ட அவர்கள் ஒருவரை ஒருவர்
தள்ளிவிட்டுக் கொள்வார்கள். விழுந்து எழுவார்கள். ஒவ்வொரு பெட்டியாக ஓடி
அழுகையுடன் தேடியலைந்த மக்கள் தங்கள் உறவினர்களின் பெயரைச் சொல்லி
அழைப்பார்கள். ஏதாவது செய்தி கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தங்களின்
கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா என்றும் பார்ப்பார்கள். ஏதாவது
செய்தி கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தங்களின் கிராமங்களைச்
சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா என்றும் பார்ப்பார்கள். சரக்கு மூட்டைகளின் மீது
விசும்பிக் கொண்டு கிடந்தன அனாதைக் குழந்தைகள். தப்பியோடி வரும்போது பிறந்த
குழந்தைகளை அவற்றின் தாய்மார்கள் துயரம் தோய்ந்த மக்கள் கூட்டத்துக்கு
நடுவேயிருந்து பராமரித்தார்கள்.
பிளாட்பாரத்தின் தலைப் பகுதியில் தனது இடத்தில் நின்று கொண்ட சிங்,வந்து
கொண்டிருந்த ரயில் என்ஜின் நிற்பதற்குக் கொடியை அசைத்தார். மிகப் பெரிய அந்த
இரும்பு உருவம் உருண்டு வந்து அவரது தலைக்கு மேல் உயர்ந்து நின்றபோது சிங் ஒரு
வித்தியாசமான காட்சியைக் கண்டார். ஆயுதம் தாங்கிய நான்கு வீரர்கள் துயரம்
தோய்ந்த ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பாக நின்றிருந்தனர். ஹிஸ்…என்ற ஓசையுடன்
நீராவி வெளியேறுவதும்,பிரோக்குகளின் கீறிச்சிடும் ஒலியும் நின்றபோது,ஏதோ ஒரு
பயங்கரமான விபரீதம் நடந்திருப்பதாக சிங் திடீரென்று உணர்ந்தார்.
பிளாட்பாரத்தில் இரைச்சலிட்டுக் கொண்டு நெருக்கியடித்திருந்த கூட்டம் இப்போது
செயலற்று அமைதியாய் உறைந்து போய்விட்டது. அவர்கள் கண்முன் தெரிந்த காட்சியே
இதற்குக் காரணம் எட்டு பெட்டிகளின் கீழ்ப் பகுதியை சிங் கூர்ந்து கவனித்தார்.
அந்தப் பெட்டிகளின் ஜன்னல்கள் அனைத்தும் அகலத் திறந்திருந்தன. ஆனால் அவற்றில்
எதிலும் ஒரு மனிதர்கூட நின்று கொண்டிருப்பது தெரியவில்லை. அந்தப் பெட்டிகளின்
கதவு ஒன்றும் திறந்திருக்கவில்லை. ஒரு நபர் கூட அந்த ரயிலிலிருந்து
இறங்கவில்லை. அந்த ரயில் முழுவதும் பூதங்கள் தான் வந்திருந்தன.
அந்த ஸ்டேஷன் மாஸ்டர் முதல் பெட்டி அருகே விரைந்து நடந்தார். கதவை இழுத்துத்
திறந்தார். உள்ளே அடியெடுத்து வைத்தார். அமிர்தசரசில் அன்று இரவு எக்ஸ்பிரஸ்
ரயிலிலிருந்து ஒருவர் கூட இறங்காதது ஏன் என்பதை அவர் இப்போது புரிந்து
கொண்டார். அந்தப் பெட்டிகள் நிறைய வந்திருந்தவை பூதங்கள் அல்ல. மனித உடல்கள்.
அந்தப் பெட்டியின் தளப்பகுதி முழுவதும்,இறந்து போன மனித உடல்கள் குவிந்து
கிடந்தன. கழுத்து வெட்டப்பட்டவை;மண்டை பிளக்கப்பட்டவை;குடல் சரிந்தவை.
ரயில்பெட்டிகளின் ஓரப்பகுதிகளில் கைகளும்,கால்களும்,தலையற்ற முண்டங்களும்
சிதறிக் கிடந்தன. அவரது காலடியில் கிடந்த மனிதப் பிணக்குவியலுக்கு மத்தியில்
எங்கிருந்தோ முணுமுணுக்கும் சத்தம் வருவதை சிங் கேட்டார். அவர்களில் சிலர்
உயிருடனிருக்கக் கூடும் என்பதை உணர்ந்த சிங் உரக்கக் கூறினார். “நீங்கள்
அமிர்தசரஸில் இருக்கிறீர்கள். இங்கே இருக்கும் நாங்கள் இந்துக்கள் மற்றும்
சீக்கியர்கள். காவல் துறையினரும் இருக்கிறார்கள் அஞ்சாதீர்கள்.’
அவரது வார்த்தைகளைக் கேட்டவுடன் அந்தப் பிணக்குவியலிலிருந்து சிலர் நெளிந்தனர்.
அந்தக் கோரக் காட்சிகளைத் தொடர்ந்து நடந்தவை ஸ்டேஷன் மாஸ்டரின் மனதில் அழிக்க
முடியாமல் பதிந்து விட்டன. ஒரு பெண் அவளுக்குப் பக்கத்தில் உறைந்து கிடந்த
ரத்தச் சகதியிலிருந்து துண்டிக்கப்பட்ட கணவனின் தலையை எடுத்தாள். அதனைத் தனது
கைகளில் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள். கசாப்பு செய்யப்பட்ட தங்களின்
தாய்மார்களின் உடல்களை அசைத்து அசைத்துக் குழந்தைகள் அழுததை அவர் கண்டார். மனித
உடல்களின் குவியலுக்குள்ளிருந்து துண்டு துண்டாக்கப்பட்ட குழந்தைகளைக்
கண்டெடுத்த தந்தையர் அதிர்ச்சி அடைந்தனர். பிளாட்பாரத்தில் இருந்த மக்களுக்கு
என்ன நடந்துள்ளது என்பது புரிந்து விட்டது. அவர்கள் அழுது அரற்றினார்கள். பலர்
பைத்தியம் பிடித்தது போலானார்கள்.aa
மரத்துப் போன மனநிலையுடன் வரிசையாகக் கிடந்த சடலங்களுக்கிடையே நடந்து சென்றார்
ஸ்டேஷன் மாஸ்டர். ஒவ்வொரு பெட்டியிலும் இதுபோன்ற காட்சிதான். கடைசிப்பெட்டியை
அவர் அடையும் போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பிளாட்பாரத்துக்குத்
திரும்பி வந்தார். பிணவாடை அவரது மூக்கைத் துளைத்தது. “இப்படியொரு செயலைக்
கடவுள் எப்படி அனுமதித்தார்?’சிங் யோசித்தார்.
அவர் மீண்டும் திரும்பி ரயில் வண்டியைப் பார்த்தார். அப்போது கடைசிப்
பெட்டியில் கொலைகாரர்கள் சுண்ணாம்பால் எழுதியிருந்த வாசகங்களை அவர் கண்டார்.
‘நேருவுக்கும் படேலுக்கும் இந்த ரயில் வண்டி எங்களின் சுதந்திரப் பரிசு’என்று
அதில் எழுதப்பட்டிருந்தது.
நன்றி:‘நள்ளிரவில் சுதந்திரம்’
நன்றி:
www.keetru.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif