சனி, 28 ஜனவரி, 2012

குடியரசு தின விழாவிலும் ஜாதி வெறி


குடியரசு தின விழாவிலும் ஜாதி வெறி: தலித் பெண் பஞ்.தலைவருக்கு அடி உதை!

casteism-in-Tamilnadu-4
புதுக்கோட்டை:தாழ்த்தப்பட்ட சமுதாயம் எவ்வளவுதான் தங்களது உரிமையை கோரி போராடினாலும், அரசு அதிகாரத்திலோ, மக்கள் பிரதிநிதிகளாகவோ வந்தாலும் அவர்கள் மீதான உயர்ஜாதியினரின் வெறித்தனம் மட்டும் அடங்கவில்லை.
புதுக்கோட்டை அருகே குடியரசு தின விழாவில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது உயர்ஜாதி ஆதிக்க வெறியர்கள் அவரை பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்துள்ளனர்.
புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி கரு.வடதெரு ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் கலைமணி. பெண் தலித் ஊராட்சித் தலைவர் இவர். இவர் தேசியக் கொடி ஏற்ற முயன்றபோது தான் இந்த அடி உதை சம்பவம் நடந்துள்ளது.
தலித் இனமக்கள் ஆட்சியமைப்பில் உரிய முக்கியத்துவம் பெறுவதை இன்னும் ஆதிக்க சாதி சக்திகள் எந்த அளவுக்கு எதிர்க்கின்றன என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னத்துரை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கறம்பக்குடி ஒன்றியத்தில் நான்கு ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சியைத் சேர்ந்தவர்கள் தலைவர்களாக உள்ளனர்.
இதில் கரு.வடதெரு ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் கலைமணி அண்ணாத்துரை.
இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது கணவர் அண்ணாத் துரை மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார்.
ஊராட்சித் தலைவர் கலைமணி அண்ணாத்துரையை குடியரசு தினவிழாவில், கொடியேற்ற தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும், பாதுகாப்புகோரி வடகாடு காவல் நிலையத்திலும், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரிடமும் கடந்த 19.1.2012 அன்று மனு கொடுத்தோம்.
இந்த நிலையில் குடியரசு தினத்தன்று ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பு தலைவர் கலைமணி அண்ணாத்துரை தேசியக்கொடி ஏற்றும் போது துணைத் தலைவர் ரெங்கம்மாளின் மகன் குமார், வீராச்சாமி மற்றும் 20 பேர் கொண்ட கும்பல் திடீரெனப் புகுந்து, தலைவர் கலைமணியை சாதிப் பெயரைச் சொல்லி, இழிவாகப் பேசி தாக்கி தேசியக் கொடியை தாங்களே ஏற்றினர்.
அதே போல, ராஜா குடியிருப்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் ஊராட்சித் தலைவரை கொடியேற்ற விடாமல் சாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்து தலைமை ஆசிரியரை கொடியேற்ற வைத்துள்ளனர். இச்செயல் சுதந்திர இந்தியாவின் தேசிய அவமானமாகும்.
முன்கூட்டியே புகார் தெரிவித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தலித் ஊராட்சித் தலைவரை தேசியகொடி ஏற்றவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பரமக்குடி கலவரம், பசுபதி பாண்டியன் கொலையை அடுத்து தலித் பெண் பஞ்.தலைவரின் தாக்குதல் சம்பவம் தனது உயர் ஜாதிக் குறித்து பெருமைக் கொள்ளும் ஜெ.வின் ஆட்சியில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif