சனி, 31 மார்ச், 2012

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக மின்சாரகட்டணம்

மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் - மமக போராட்டங்களை முன்னெடுக்கும் 

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை...

தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்து மற்றொரு அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே பால் விலை மற்றும் பேரூந்து கட்டண உயர்வாலும் மக்கள் மிகவும் துன்பத்தில் உள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக மின்சாரகட்டணம் 37% உயரும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.



இதற்கு மின்சார வாரியம் நட்டத்தில் ஓடுவதாகவும், அதை லாபத்தில் மாற்றவே இந்த முடிவு என கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியபோது கடும் எதிர்ப்பை சந்தித்தனர்.

ஒரு அரசு என்பது லாபநோக்கில் மட்டுமே செயல்படக்கூடாது. மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மின் திருட்டை ஒழிப்பதன் மூலமும், நிர்வாகத்தை சீர்செய்வதன் மூலமும் நஷ்டத்தை ஓரளவு சமாளிக்க முடியும்.

கட்டண உயர்வு என்பது ஒரு அளவோடு இருந்தால் கூட சகிக்க முடியும். பால், பேருந்து கட்டண உயர்வைப் போலவே இதுவும் ஒரு அநியாயயே விலை உயர்வாக இருக்கிறது.

37% விலை உயர்வு என்று கூறினாலும், தனித்தனியே கணக்கிட்டால் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மக்களுக்கு கட்டண உயர்வு 50 சதவீதத்தை தாண்டுகிறது.

ஏற்கனவே 8 மணிநேரம், 10 மணிநேரம் என மக்கள் மின்சாரமின்றி தவிர்க்கிறார்கள். இந்நிலையில் அவர்களை மேலும் துன்பத்தில் தள்ளக்கூடாது.

இக்கட்டண உயர்வு மக்களை நேரிடையாக கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளதால் தமிழகஅரசு இக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

இக்கட்டண உயர்வுக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.



எம்.தமிமுன் அன்சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif