"ராஜு" என்ற குற்றவாளிக்கு பதில் "முஹர்ரம் அலி" என்ற அப்பாவியை "ஆள்மாறாட்டம்" செய்து ஜெயிலுக்கு அனுப்பிய மாவட்ட நீதிபதியின் அனைத்து அதிகாரங்களையும் பறித்திட, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் "லக்னவ் பெஞ்ச்" தீர்ப்பளித்துள்ளது.
தவறிழைத்த மாவட்ட நீதிபதி "மனோஜ்குமாரின் செயலை கடுமையாக சாடிய நீதியரசர்கள்" அப்துல் மதீன் மற்றும் உபாத்யா ஆகியோர் அளித்த தீர்ப்பில், மாவட்ட நீதிபதியின் அதிகாரங்களை பறிக்க உத்தரவிட்டதுடன், அவர் மீது "விஜிலென்ஸ்" மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்தியாவில் தான், இது போன்ற அக்கிரமங்கள் நடக்கும் என்று சொல்லக்கூடிய அளவுக்கான செய்தியாவது:
ராஜு யாதவ் என்பவர் மீது "லக்னவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில்" 3 வழக்குகள் நிலுவையில் இருந்தது.
ராஜுவுக்கு எதிரான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், அவரை ஆஜர்படுத்த முடியாமல் திணறிய "காசியாபாத்" காவல் துறையினர், ராஜுவுக்கு பதிலாக "முஹர்ரம் அலி" என்ற அப்பாவியை "ஆள்மாறாட்டம்" செய்து ஜெயிலுக்கு அனுப்பி விட்டனர்.
போலீசின் இந்த சதிச்செயலுக்கு "மாவட்ட நீதிபதி மனோஜ்குமார்" உடந்தையாக இருந்து, அப்பாவி முஹர்ரம் அலியை ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார்.
முஹார்ரம் அலி, தான் ராஜு இல்லை-ராஜு இல்லை, என நீதிமன்றத்தில் கதறியதையும் பொருட்படுத்தாமல், அவரை கடந்த செப்டம்பர் மாதம் ஜெயிலுக்கு அனுப்பினார் நீதிபதி.
மகனை காணவில்லை, என முஹர்ரமின் தாயார் சார்பில் தாக்கல் செய்யப்பட "ஆட்கொணர்வு" மனு மீதான விசாரணையில், நீதிமன்ற அமர்வு, நவம்பர் 6ந்தேதி, லக்னவ் மாவட்ட ஜெயில் ரெக்கார்டுகள் கேட்டுப்பெற்று, ஜெயிலில் ராஜு என்ற பெயரில் முஹர்ரம் அலி இருப்பதை உறுதி செய்தனர்.
முஹர்ரம் அலி மீது எந்த வழக்கும் இல்லை, என உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில், "ஆள்மாறாட்டம்" செய்து ஜெயிலுக்கு அனுப்பிய மாவட்ட நீதிபதியின் அனைத்து அதிகாரங்களையும் பறித்திட, தீர்ப்பளிக்கப்பட்டது.
மாவட்ட நீதிபதிக்காக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட "அரசு வழக்கறிஞர்" உமேஷ் வர்மா வாதிடும்போது,
நான் அரசு வக்கீல் தான், என்றாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாவட்ட நீதிபதியின் செயலை என்னால் நியாயப்படுத்த முடியாது.
மேலும்,பழுத்த அனுபவமிக்க மூத்த நீதிபதி, அப்பாவி முஹர்ரம் அலியை ஜெயிலுக்கு அனுப்பியது, மன்னிக்க முடியாதது, என்றார்.
சாதாரண மனிதர்கள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ளலாம், ஆனால் மக்களால் மதிக்கப்படும் நீதிபதிகளே குற்றமிழைத்தால் என்ன சொல்லுவது? என்று வேதனைப்பட்டார், அரசு வழக்கறிஞர் உமேஷ் வர்மா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக