வியாழன், 12 செப்டம்பர், 2013

இந்திய மக்கள் மகிழ்ச்சியில் இல்லை – ஐ.நா. ஆய்வு!

இந்திய மக்கள் மகிழ்ச்சியில் இல்லை – ஐ.நா. ஆய்வு!

ind
வாஷிங்டன்: இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவு என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
மகிழ்ச்சி என்பதற்கான தெளிவான ஒரு விளக்கத்தை வழங்குவது சிரமமான, சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகாவே உள்ளது. எனினும் பத்து அம்சங்களை உள்ளடக்கி அதன் அடிப்படையில் உலக அளவில் சில ஆய்வுகளைச் செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான, நீடிக்கத்தக்க வளர்ச்சிக்கான தீர்வுகளை முன்வைக்கும் வலையமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2010 முதல் 12 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய்கிழமை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. மகிழ்ச்சிக்கான ஆய்வுகளைச் செய்ய அவர்கள், குடுமபங்களின் வருமானம், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் அடங்கிய அளவுகோல், ஊழல் குறித்த மக்களின் பார்வை, நன்கொடைகள் அளிப்பது, முடிவுகளை எடுக்கக் கூடிய சுதந்திரம், அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவிகள், நாட்டில் நிலவும் சாதக, பாதக விஷயங்கள் ஆகியவை உள்ளடக்கி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.
பத்து புள்ளிகளைக் கொண்ட அந்தப் பட்டியலில், உலக அளவிலான மகிழ்ச்சி என்பது சராசரியாக 5.158 எனும் நிலையில் உள்ளது. உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு எனும் பெருமையை 7.693 புள்ளிகளுடன் டென்மார்க் பெறுகிறது. அடுத்த இடங்களில் முறையே நார்வே, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை உள்ளன.
தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில், மக்களின் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சியினால் சில சாதகமான பங்களிப்புகள் இருந்தாலும், சமூக நல ஆதரவுகள் குறைக்கப்படுவதன் தாக்கம், சுதந்திரமாக முடிவு எடுப்பதில் இருப்பதாக கருதப்படும் தடைகள் ஆகியவை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனவும் ஐ.நா.வின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளவிலான அந்தப் பட்டியலில், தெற்காசிய நாடுகளில், பாகிஸ்தான் 81 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 111 ஆவது இடத்திலும், இலங்கை 137 ஆவது இடத்திலும் உள்ளன. எனினும் சில அளவுகோலின்படியே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அதுவும் ஒரு குறியீடுதான் எனவும் கூறும் அந்த அறிக்கை, சிறந்த வாழ்க்கை எது என்பதை புரிந்து கொள்ள கூடுதலாக தகவல்கள் தேவை எனவும், அதன் மூலம் விரிவான புரிதலைக் கொண்டே கணிக்க முடியும் எனவும் கூறுகிறது.
- See more at: http://www.thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif