திங்கள், 30 செப்டம்பர், 2013

நீங்கள் உங்கள் தலைமையை இந்த விடயத்திற்காக வலியுறுத்துங்கள்.


1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. 
ஒரு பண்பட்ட சமூகம் வாழும் நம் நாட்டில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தனமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஒரு கருப்பு நாள். இடித்தவர்கள் கரசேவகர்கள் என்ற பெயரோடு உலா வர, அதை எதிர்த்து வீதிகளில் குரல் கொடுத்த எண்ணற்ற முஸ்லிம் சமுதாயத்தின் இளைஞ்சர்கள் கைது செய்யப்பட்டார்கள். 
தடா என்ற கொடிய சட்டம் இந்த இளைஞ்சர்கள் மீது குருட்டுத்தனமாக பாய்ந்தது. 

ஆம், சகோதர சகோதரிகளே, ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞ்சர்கள் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஜனநாயகரீதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டன. எண்ணற்ற சகோதர கண்மணிகள் கைது செய்யப்பட அந்த தருணத்தில், கைது செய்யப்பட மிக முக்கிய போராளி சகோ. கோவை அன்சாரி அவர்கள். 
இன்று நம்முடைய இளஞ்சர்கள் இவரை தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த தருணத்தில் தமிழகத்தின் அனைத்து மக்களும் இவரை அறிந்து வைத்திருந்தார்கள். 

வாய் திறக்க சமுதாயம் தயங்கிய போது வீதிகளில் வந்து நீதி கேட்டு குரல் கொடுத்தவர் இவர். இவர் சிறைச்சாலையில் இருந்து வரும் காலங்களை கணக்கிடும் போதே நம் இதயம் கனக்கிறது. 

1993
ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை தடா என்ற கொடிய சட்டத்தின் கீழ் சிறைவாசம். 
1998
முதல் இன்று வரை கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைவாசம். 
ஏறத்தாள 18 ஆண்டுகள் சிறை கொடுமையின் பிடியில் பிணை கூட கொடுக்க மறுக்கும் நம் நீதிமான்களை என்னவென்று சொல்ல. 

கட்டிய மனைவியை 40 நாட்களை பிரிந்த இந்த சகோதரன் இன்று வரை வீடு திரும்பவில்லை. 
நிரபராதிகளின் கண்ணீருக்கு நம் சமுதாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 
நாம் போராடுகிறோம். ஆனால், அந்த போராட்டங்கள் இன்று அடையாளமாக மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது. போராட்ட களத்தின் புகைப்படங்களை நம் இயக்கங்களின் பத்திரிக்கைகளில் பார்த்த உடனே இவர்களுக்கு விடுதலை வாசல் திறந்துவிட்டது போலும் என நம் புருவங்களே நம்மை கேட்காமல் உயருகிறது. ஆனால், கூட்டம் சேர்ந்து களைந்த ஆட்டு மந்தைகளாக மட்டுமே நம்மை இந்த அரசாங்கம் பார்கிறது என்பது மட்டுமே எதார்த்தமான உண்மை. 
நம்முடைய ஆதரவை பெற வேண்டுமானால் எங்களுடைய ஒற்றை கோரிக்கை அல்லது இரட்டை கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என நெஞ்சுயர்த்தி டிமாண்ட் செய்கிறோம். ஆனால், அவை ஆட்சிகட்டிலில் ஆட்சியாளர்களை அமரவைத்த பின்னர் காற்றில் பறக்கவிடும்போது அடையாள போராட்டங்களை முன்னெடுக்கிறோம் அல்லது மௌனம் காக்கிறோம். 

2011
ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தின் மிக முக்கிய கோரிக்கையாக 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டு கொண்டோம். இன்று வரை அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது. 2011 ஆண்டிலிருந்து பல அண்ணா பிறந்தநாட்கள் கடந்து விட்டன ஆனால் எங்களுடைய அண்ணன்மார்கள் விடுதலை செய்யப்படவில்லை. அடுத்து 2016 ஆம் ஆண்டில் ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.

பொதுமன்னிப்பு என்ற பேச்சையே நம் அரசு பேசுவதில்லை. சரி, உச்சநீதிமன்றம் சென்றாவது இவர்களுக்கு விடுதலை பெற்றுவிடலாம் என டெல்லி சென்றால், வழக்கை எடுப்பதற்கே யோசிக்கும் நம் நீதி அரசர்களை என்னவென்று சொல்ல.....எடுத்து தீர்ப்பு நம் சமுதாய கண்மணிகளுக்கு சாதகமாக வந்தால் அவர்களின் பதவி உயர்வு கெடுமாம். 

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இவர்களின் விடுதலையை மரணம் ஒன்று மட்டுமே பெற்று தந்திடுமோ என என்னிட தோன்றுகிறது. 

என் அன்பான உறவுகளே, இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் ஏதாவது ஒரு இயக்கத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் தலைமையை இந்த விடயத்திற்காக வலியுறுத்துங்கள். கைதட்டலின் ஓசை ஒரு கையினால் வருவதில்லை, இரண்டும் இனைய வேண்டும். நாம் இணைந்த கைகளாக எம் அருமை சிறைவாழ் சகோதரர்களுக்கு குரல் கொடுப்போம். இவர்களின் விடுதலை நம் சமுதாய கனவு. அந்த கனவை நிச்சயம் நினைவாக்குவோம். 

புகைப்படத்தில் இருப்பவர்: சகோ. கோவை அன்சாரி அவர்கள்.
இடம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சகோ. அன்சாரி அவர்கள் வந்த போது தனதருமை இரண்டாவது மகள் தனது தந்தையை கண்டதும் ஓடோடி சென்று மடியில் அமர்ந்து கொண்டாள். கண்ணீரோடு தந்தையும் மகளும் மௌனமாக உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம். 

இறைவா! இவர்களின் மீது அக்கறை கொண்டுள்ள உண்மை இதயங்களை ஒன்றினைப்பாயாக....
இவர்களுடைய விடுதலையை எளிதாக்குவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif