ஞாயிறு, 6 அக்டோபர், 2013

என் தம்பி போலீஸ் பக்ருதீன் அப்பாவி. அவன் மீது போலீஸார் பொய்யான வழக்கைப் போட்டுள்ளனர்.


மதுரை: “என் தம்பி போலீஸ் பக்ருதீன் அப்பாவி. அவன் மீது போலீஸார் பொய்யான வழக்கைப் போட்டுள்ளனர். அவன் மீதான வழக்குகளை சி.பி.. வசம் ஒப்படைக்க வேண்டும்என்று பக்ருதீனின் அண்ணன் தர்வீஸ் மைதீ்ன் கூறியுள்ளார்.
இது குறித்து தர்வீஸ் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
என் தம்பி அப்பாவி. அவனுக்கு அத்வானி குண்டுவைப்பு சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லை. அவனை பொய்யாக இந்த வழக்கில் போலீஸார் சேர்த்துள்ளனர். டி.வி.யில் செய்தி பார்த்துத்தான் என் தம்பி கைதானதை தெரிந்து கொண்டோம்.
பின்னர் வழக்கறிஞர் தடா அப்துர் ரஹீம் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கைது உண்மையா என்று கேட்டு அதை உறுதி செய்தோம். தீவிரவாத நடவடிக்கைகளில் பக்ருதீனுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள். ஹவாலாவில் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.
இதுதான் உண்மை. எந்த குற்றச் செயலிலும் என் தம்பிக்குத் தொடர்பு இல்லை. இந்துத் தலைவர்களைக் கொல்வதிலோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதிலோ எங்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதில் துளியும் நம்பி்க்கை இல்லாதவர்கள் நாங்கள்.
போலீஸார் சட்டப்படி, சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பக்ருதீன் சம்பவம் எங்களது குடும்பங்களை நிலை குலைய வைத்துள்ளது. அனைவரும் அதிர்ந்து போய் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்.
பக்ருதீன் குறித்து அறிவதற்காக என்னிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது என்னை உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார்கள். பின்னர் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார்கள். இப்போது பக்ருதீன் பிடிபட்டு விட்டதால் எங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும். இனியும் எங்களது வீட்டுக்கு போலீஸார் வருவதை நாங்கள் விரும்பவில்லை.
என் தம்பி மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளிலும் எனது பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் எனக்கு யாரும் வேலை தர மறுக்கின்றனர். வேலை இல்லாததால் நான் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். விசாரணை என்ற பெயரில் என்னையும், என் தாயாரையும் போலீசார் அலைக்கழிக்கின்றனர்.
என் தம்பியின் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து சிறப்பு புலனாய் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனை சி.பி.. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.
தர்வீஸின் மனைவி நஸீமா கூறுகையில், “விசாரணை என்ற பெயரில் என்னையும் துன்புறுத்தினர் போலீஸார். பெண் போலீஸாரை வைத்து விசாரிக்காமல் ஆண் போலீஸார்தான் என்னை விசாரித்தனர். என் கணவரை அடித்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி, என் கணவருக்கு ஏற்பட்ட காயம் விபத்தில் ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறுமாறு என்னை மிரட்டினார். ஆனால் அடித்ததால்தான் காயம் ஏற்பட்டதாக டாக்டர்கள் கண்டுபிடித்து விட்டனர்என்றார்.
- See more at: http://www.thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif