சனி, 16 ஜூலை, 2011

இராமர் பாலம் என்ற பெயரால்



பரமக்குடி: நமது நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும், மதமும் குறுக்கே நிற்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பரமக்குடி அரசு கலைக் கல்லூரிக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார். அந்த நிதியை வைத்து கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

கடந்த மூன்றாண்டு காலத்தில் எனக்கு வழங்கப்படும் நிதியில் இருந்து 80 சதவீதத்தை கல்லூரி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கி வருகிறேன்.

இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு கல்வி மிகவும் முக்கியமானதாகும். இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை போக்க கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் பரிந்துரை செய்தார். ஆனால் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக துவக்கப்பட்ட சேதுசமுத்திர திட்டப் பணிகள் இராமர் பாலம் என்ற பெயரால் மத ரீதியாக பாதியிலேயே முடக்கப்பட்டு பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும், மதமும் குறுக்கே நிற்கிறது. வரலாறு, தத்துவம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை இல்லை.

மேலும் இராமநாதபுரம் மாவட்ட மாணவ-மாணவிகள் வாய்ப்பு கிடைத்தால் விளையாட்டு வீரர்களாக, விஞ்ஞானிகளாக வரமுடியும். ஆனால் சாதி குறுக்கே நிற்கிறது.

எங்கள் காலத்தில் எதையும் எதிர்பாராத கல்வி கொடையாளர்கள் பள்ளி, கல்லூரிகளை உருவாக்கினர். ஆனால் இன்று மருத்துவ படிப்புக்காக ரூ. 40 லட்சம் கட்டி சீட்டு வாங்கும் நிலை உள்ளது.

பிரிட்டனில் பொதுப் பள்ளியில் கல்வி கற்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அரசுக் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோர் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif