திங்கள், 28 நவம்பர், 2011

மானபங்கம் படுத்தும் காக்கிகள்



நான்கு பெண்களைக் காவல்துறையினர் கடத்திச் சென்று மானபங்கம் செய்ததாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டிடம் அதிச்சியளிக்கும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தி.மண்டபம் பெருமாள் கோவில் மண்டபப்படியில் வசித்து வருபவர் காசி. இவருடைய மனைவி லட்சுமி. இவருக்கு இருபது வயதாகிறது. நேற்று காலை விழுப்புரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் இவர் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்தப் புகாரில்,

"நான் பழங்குடி இருளர் ஜாதியைச் சேர்ந்தவர். நானும் எனது கணவரும் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள ஒரு செங்கல் சூளையில் எனது பெற்றோருடன் வேலை செய்து வருகிறோம். தற்போது மழைக்காலம் என்பதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம்.

கடந்த 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு நானும் உறவினர்களான கார்த்திகா, வைகேஸ்வரி, எனது கணவர் காசி ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 காவலர்கள் எங்களது வீட்டிற்கு வந்து எனது கணவர் காசியை, அழைத்துச் சென்றனர். மேலும் எனது நாத்தனார் வைகேஸ்வரியைப் பார்த்து உனது தந்தை வந்ததும் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லுமாறு கூறி விட்டனர்.

பின்னர் எனது மாமனார், மாமியார், வெள்ளிக்கண்ணு, உறவினர் ஏழுமலை, எங்களது வீட்டின் அருகில் உள்ள குமார் ஆகியோர் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்குச் சென்று எனது கணவர் காசியைப் பற்றி விசாரித்தனர். அங்கிருந்த காவலர்கள் காசியை விழுப்புரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாக கூறினர்.

பின்னர் அன்று இரவு 8 மணிக்கு ஒரு வேனில் 8 காவலர்கள் எங்களது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும் சோதனை செய்தனர். வீட்டில் பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் இருந்த 10 பவுன் தங்க நகைகளையும், ரூ.2 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டனர்.

அதன் பிறகு என்னையும், கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகியோரையும் கொழுந்தனார்கள் படையப்பா, மாணிக்கம், ரங்கநாதன் மற்றும் குமார், செல்வி ஆகிய 9 பேரை திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு ஆண்களை எல்லாம் ஒரு அறையில் அடைத்தனர். எனது மாமியாரைச் சோதனையிட்டு அவரை மிரட்டி ஒரு வெள்ளை பேப்பரில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர். பின்னர் எனது மாமியாரை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு தைலமர தோப்பிற்கு வந்தனர். அங்கு எனது மாமியார் வந்த வேனில் எங்கள் 4 பேரையும் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

நள்ளிரவு 12 மணிக்கு என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய 4 பேரையும் கீழே இறக்கி வேனில் இருந்த 4 காவலர்களும், எங்களைத் தனித்தனி மறைவிடங்களுக்குத் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக மானபங்கப்படுத்தினர்.

பின்னர் எங்கள் 4 பேரையும் காவல்துறையினர் வேனில் ஏற்றினர். வேனில் பின்புறம் இருந்த எனது மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி அழுதோம். காலை 5 மணிக்கு எங்கள் வீட்டின் அருகே எங்களை விட்டு விட்டு சென்று விட்டனர். மீண்டும் காவல்துறையினர் வருவார்கள் என பயந்து நாங்கள் 4 பேரும் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எனது பெற்றோர்களின் வீட்டிற்குச் சென்று விட்டோம்.

எனது கணவர் காசி, அவரது அண்ணன் வெள்ளிக் கண்ணு, மாமனார் முருகன், சின்ன மாமனார் குமார், உறவினர்கள் குமார், ஏழுமலை ஆகிய 6 பேரை கடத்திச் சென்ற காவலர்களிடமிருந்து மீட்டுத் தருமாறும் எங்கள் 4 பேரை வன்புணர்ந்த திருக்கோவிலூர் காவல்துறையினர்மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்குப் பாதுகாப்பும், நீதியும் கிடைக்க உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம்."

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி இந்நேரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif