ஜம்மு: காஷ்மீரில் ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு எங்கள் அரசுக்கு அதிகாரம் உண்டு, விரைவில் இச்சட்டம் வாபஸ் பெறப்படும் என, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கடந்த 90ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. சந்தேகப்படும் நபர்களை கைது செய்ய இந்த சட்டத்தின் மூலம் ராணுவத்துக்கும், காவல்துறையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு படையினர் இச்சிறப்பு சட்டத்தின் மூலம் காஷ்மீர் இளைஞர்களை சித்ரவதை செய்து கொன்றும் அங்குள்ள பெண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொல்வதுமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்று பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன
இந்நிலையில் அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிணங்களும் அங்குள்ள கல்லரை மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவே இந்த சட்டத்தை, உள்ளூர் கட்சிகளும், இயக்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. இது தொடர்பாக நடத்தப்படும் கண்டன ஊர்வலங்களில், வன்முறைகள் வெடிப்பதால் இச்சட்டத்தை வாபஸ் பெற, மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.
ஆனால், இதற்கு இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தால் ராணுவம் ஊனமாக்கப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து, முதல்வர் ஒமர் வீட்டில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மத்திய சிறப்பு காவல்துறையினர் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
ஸ்ரீநகரில் நடந்த விழாவின் போது முதல்வர் ஒமர், நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் ராணுவம் தேவைப்படாத இடங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறித்த காபினட் கமிட்டியிலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என, கூற முடியாது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாங்கள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், கவர்னர் மூலமாக இந்த சட்டத்தை வாபஸ் பெற முடியும். "முடியாது' என்பதை நான் தீர்வாகக் கொள்ள விரும்பவில்லை. அதற்கு பதில், வேறு தீர்வு இருந்தால் சொல்லுங்கள் என, ராணுவத்திடம் கேட்டுள்ளேன்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் குறித்து, ராணுவ அதிகாரிகள் மீண்டும் என்னோடு பேச விருப்பம் தெரி வித்துள்ளனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கமிட்டியினர் அளிக்கும் சிபாரிசின் பேரில், ராணுவ அதிகாரிகளுடன் பேச உள்ளேன். இடைக்கால அறிக்கை ஒன்றை அளிக்கும்படி கமிட்டியிடம் கேட்டுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் மேற்கொண்டு பேச்சு வார்த்தை தொடரும். குளிர் காலத்தில் பொதுவாக பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்திருக்கும்.
எனவே, இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு இது தகுந்த நேரமாகக் கருதுகிறேன். முதல் கட்டமாக இந்த சட்டத்தை வாபஸ் பெறுவோம். இதனால், என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.சார்க் மாநாட்டில் பிரதமரும், பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் பேசியிருப்பது சிறப்பானது. பேச்சு வார்த்தை மூலம் தான் இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்க முடியும். இதை நாங்கள் பல முறை கூறியுள்ளோம். இவ்வாறு ஒமர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக