Sep 26: இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி என்பவரை ‘கியூ’ பிராஞ்ச் போலீஸார்” கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக உண்மை அறியும் குழுவிவின் அறிக்கை வெளிவந்துள்ளது.
உண்மை அறியும் குழுவில் பேரா.அ. மார்க்ஸ், சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), ராஜதுரை (மூத்த மனித உரிமைப் போராளி), பேரா. பிரபா கல்விமணி (பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்), பேரா. கோச்சடை (மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), வழக்குரைஞர் அ.கமருதீன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
அதிராம்பட்டினம் வெங்காய வியாபாரி அன்சாரி என்பவர் இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்துவந்தார். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி வந்த இவர் முழுக்க மார்க்சிய சிந்தனை படைத்தவர்.
இவர் ஒரு முற்போக்கு எழுத்தாளர் என்றும் புகைப்பட கலைஞசர் ஆவார். இவர் இலங்கையை சேர்ந்த ஹாஜி என்பவருக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்துவந்துள்ளார். இவர் வியாபார விசயமாக இலங்கை செல்லும்போது இவரை இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பின் அவரை என்கவுன்டர் செய்யப்போவதாக மிரட்டி செல்போனில் இவரது மனைவியோடு பேச வைத்து வீட்டில் இருந்த லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும் பஸ் நிற்கும் இடத்தில் ஓடிப்பிடித்து கைது செய்ததாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் உண்மை அறியும் குழு விசாரித்ததில் இதுபோல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தெளிவாகியது.
மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாலார்களை சந்தித்து அன்சாரி குறித்து உண்மை அறியும் குழு விசாரித்துள்ளது. இவரை பற்றி அவர்கள் நல்லவிதமாகவே கூறியுள்ளனர். மேலும் திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் விசாரித்தபொழுது இது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது எனக் கூறியுள்ளனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டு இறுதியாகப் பேசிய ஆய்வாளர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து இருக்கிறார்.
அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. வெலிங்டன் ராணுவ மையத்தை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனில் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்?இது உளவுத்துறையின் திட்ட மிட்ட சதியாகவே தெரிகிறது.
தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்து அரசியல் நோக்குடன் செயல்படுகின்றன. தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் செயல்பட்டிருக்கலாம், தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான உளவுத்துறையின் உத்தியாகவும் இருக்கலாம் என்றே எண்ண முடிகிறது.
அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்கரிஞ்சர்களும் காவல்துறையே இதற்குக் காரணம் என்று குற்றம் சுமத்தியதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக