வியாழன், 27 செப்டம்பர், 2012

பொதுமக்களுக்கு இடையூறு செய்வது எமது நோக்கமல்ல


தமிழக முஸ்லிம்களின் அமெரிக்க எதிர்ப்பு போராட்டம்:
பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்!

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்காவில் சாம் பசிலி எனப்படுகிற நகவ்லா பசிலி நகவ்லா என்ற அமெரிக்க யூதர் எடுத்த திரைப்படத்தை எதிர்த்தும், அதற்கு வக்காலத்து வாங்கும் அமெரிக்காவைக் கண்டித்தும், உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கடந்த 13.09.2012 முதல் தமிழகத்தில் முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உயிரினும் மேலானவராகக் கருதும் தங்கள் வழிகாட்டியை இழிவுபடுத்தியதைப் பொறுக்க முடியாத முஸ்லிம்கள் உணர்வுப்பூர்வமாகப் போராடுகிறார்கள்.

இப்போராட்டங்களின் போது சில கோபக்காரர்களால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அது கண்டிக்கத்தக்கது. நியாயப்படுத்த முடியாதது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சாலைகளில் பயணித்தவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்கள், பாதசாரிகள், வியாபாரிகள் மற்றும் காயம்பட்ட காவலர்கள் என அனைவரும் மனம் பொறுத்தருள வேண்டுகிறோம்.

பொதுமக்களுக்கு இடையூறு செய்வது எமது நோக்கமல்ல. ஒருசிலரின் கோபங்களால், பொறுப்பற்றத்தனத்தால் சென்னை மாநகரில் சில இடங்களில் பதட்டம் ஏற்பட்டு இரண்டு அரசுப் பேருந்துகள், இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்துள்ளனர். அதேபோல் காவல்துறையின் தடியடியால் 20 பேர் வரை காயமடைந்து, மூன்று பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இவையனைத்தும் மிகுந்த வருத்தத்திற்குரியவை. நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் மட்டுமல்ல, பலதரப்பு மக்களும் மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் உத்தம தலைவரை அவமதிக்கும் அநீதிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களும், காவல்துறையினரில் சிலரும், தடியடியில் சிலரும் பாதிக்கப்பட்டிருப்பது எங்கள் மனசாட்சியை உறுத்துகிறது. இதற்காக அனைத்து சமுதாய மக்களிடமும் மீண்டும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பிரச்சினையை சரிவரக் கையாளவில்லை என சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை தமிழக அரசு மாற்றியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
காரணம், திரிபாதி அவர்கள் அந்தப் பொறுப்பில் இருந்ததால்தான் நிலைமையை மேலும் பதட்டமாக்காமல் பொறுமையுடன் கையாண்டார்.

ஒருவேளை திரிபாதி அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டிருந்தால்; அதில் உயிர்ச் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால்; இதனால் தமிழகம் முழுவதும் வன்முறை உருவாகியிருக்கும். இது சட்டம் ஒழுங்கு தமிழகம் முழுக்க கெட்டுப் போயிருந்திருக்கும்.
இதுவெல்லாம் நிகழாமல் போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் ஓய்ந்ததற்கு திரிபாதி அவர்கள், மத உணர்வுகளைப் புரிந்துகொண்டு, சட்டம் ஒழுங்கை நிதானமாகக் கையாண்டதுதான் காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா புரிந்துகொள்ளவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பான எங்களது போராட்டத்தின் நியாயங்களைப் புரிந்துகொண்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் போராட்டங்களின் நோக்கம் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதல்ல என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம்.

(எம். தமிமுன் அன்சாரி)
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 photo Animation4.gif